இஸ்லாம் அன்பின் வாழ்க்கை நெறி. அது மனிதர்களுடன் மட்டுமல்ல ஏனைய உயிர் பிராணிகளுடனும் அன்பாக இருகக் வேண்டும் என்று வழியுருத்துகின்றது. இஸ்லாம் ஒருபோதும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை அதனை கடுமையாக மறுக்கின்றது.. அநியாயமாக ஒரு மரத்தை கூட வெட்டுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. அதனால் தான் அன்னல் நபி (ஸல்) அன்பு நிறைந்தவர்களாக இருந்தார்கள். அனைவரையும் பரிவோடு பார்த்தார்கள். தாயிபில் அவர்களுக்கு சொல்ல முடியாத துண்பங்களைக் கொடுத்த அவர்களை அப்படியே மன்னித்தார்கள். மனிதர்களில் யாருமே நரகம் செல்லக் கூடாது என்பதில் மிகக்கரிசனை கொண்டார்கள். அவர்களை பார்த்து அல்குர்ஆன் கூறும் போது
"இந்தச் செய்தியை அவர்கள் நம்பவில்லையானால் அதற்காகக் கவலைப்பட்டு உம்மையே அழித்துக் கொள்வீர் போலும்" அல்குர்ஆன் 18:06 என்றம், மற்றுமோர் இடத்தில்
"முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள்" அல்குர்ஆன் 3 : 159 என்றும் அல்குர்ஆன் கூறிக்கொண்டிருக்கின்றது.
அது மட்டுமன்றி நபிகளார் (ஸல்) அவர்களே கூரும் போது
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம், ஆயிஷா! அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான்" என்று கூறினார்கள். நூல் : முஸ்லிம் 5055
இஸ்லாத்தின் அன்பு என்பதன் அளவைப் பாருங்கள் ஒரு முறை உமர் (ரழி) அவர்கள் கூறும் போது 'ஒரு கோவேறுக் கழுதை பாதையின் தடுக்கி விழுந்தாழும் இந்த உமர் விசாரனை செய்யப்படுவார்" என்று கூறிய அக்கூற்று எத்தகைய தன்மை கொண்டது?
எனவே சகோதரர்களே முத்தம் என்பது அன்பின் வெளிப்பாடு. ஒருவர் மீது அல்லது ஒரு உயிரின் மீது அல்லது ஒரு பொருளின் மீது அன்பு அதிகரிக்கும் போது கட்டி அனைத்துக் கொள்கிறோம், முத்தமிடுகிறோம். ஒரு தாய் தனது குழந்தைகளை அனைத்து முத்தமிடுவதை கண்டிருக்கிறோம் பல போது அனுபவித்துமிருக்கிறோம். இது மனிதனது இயல்பு மட்டுமல்ல ஏனைய உயிரினங்களும் தனது குட்டிகளை அன்பினால் அரவனைப்பதை, முத்தமிடுவதை அவதானித்திருக்கிறோம். இதனை ஒருபோதும் இஸ்லாம் தடை செய்யவில்லை அது மட்டுமல்ல நபிகளாரின் வாழ்வைப்பார்க்கும் போது அது போற்றப்பட்டிருப்பதை காண்கிறோம். இதற்கான சில ஆதாரங்களை பின்னர் தருகின்றோம்.
ஆனால் பெரியார்கள் என்று சிலரை எடுத்துக் கொண்டு பக்தி காரணமாக ஒரு வணக்கமாக நினைத்துக் கொண்டு கால்களை முத்தமிடுவதையும், அவர்களின் பாதங்களைக் கழுவி விடுவதையும் சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு செய்தால் அவரது ஆசி கிடைக்கும், இதனால் மறுமையில் பல அந்தஸ்துக்கள் கிடைக்கும் என்று நம்பி செயற்படுகின்றனர். இத்தகைய செயற்பாடுகளையே இஸ்லாம் தடைசெய்துள்ளது அது மட்டுமன்றி அத்தகைய செயல்களை வன்மையாக கண்டிக்கின்றது. இது மாற்று மதத்தவர்களின் கலாச்சாரம். இவற்றைப் பின்பற்றுவது மாற்றுமதத்தைப் பின்பற்றுவதைப் போலாகும்.
நபிகாரின் பக்கம் பார்வையை திருப்புவோமானால்..
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அன்னாரின் மகன்) இப்ராஹீம் வசித்து வந்த அபூ ஸஃப் என்பவரின் வீட்டுக்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால் குடித் தாயாரின் கணவர் ஆவார். நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமை தூக்கி முகர்ந்து முத்தம் இட்டார்கள். ஆதாரம் புஹாரி 1303
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பேரரான) ஹசன் பின் அலீயை முத்தம் இட்டார்கள். அப்போது அன்னாரின் அருகில் அமர்ந்து இருந்த அக்ரஉ பின் ஹாபித் அத்தமபீ (ரலி) அவர்கள் எனக்கு பத்துக் குழந்தைகள் இருக்கிறார்க்ள. அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டது இல்லை, என்று கூறினார்கள். அவரை ஏறெடுத்துப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், அன்பு காட்டாதவர், அன்பு காட்டப்பட மாட்டார் என்று கூறினார்கள். ஆதாரம் புஹாரி 5997
ஆயிஷா ரலி கூறினார்கள் ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீங்கள் சிறு குழந்தைகளை முத்தம் இடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தம் இடுவது இல்லை என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உமது உள்ளத்தில் இருந்து அன்பை கழற்றி விட்ட பின் உமக்காக நான் என்ன செய்ய முடியும்? என்று கேட்டார்கள். (ஆதாரம் புகாரி, முஸ்லிம்)
பிரிதொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் இறப்பெய்திய போது, உமர் (ரலி) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. எனது உள்ளத்தில் அப்படித்தான் தோன்றுகிறது. அவர் களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். (நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறிய) பலரைப் பார்த்து, கைகளையும் கால்களையும் துண்டிப்பேன் என்றும் சொன்னார்கள். (அப்போது எனது தந்தை) அபூபக்கர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதரை போர்த்தி இருந்த போர்வையை விலக்கி, அன்னாரின் (நெற்றியில்) முத்தமிட்டு, எனது தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பனம் ஆகட்டும்! நீங்கள் உயிரோடு இருந்தபோதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் நறுமணம் கமழ்கிறீர்கள். எனது உயிரைத்தன் கைவசம் மீது வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அல்லாஹ் ஒரு போதும் இரண்டு மரணங்களை சுவைக்கும்படி உங்களைச் செய்ய மாட்டான் என்று கூறிவிட்டு வெளியே வந்தார்கள். புகாரி 1241,1242,
நெருங்கிய நண்பர்களை சந்திக்கும் போதும், பிரியும் போதும் நெற்றியில் முத்தம் இடுவதை இஸ்லாம் அனுமதிக்கிறது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஒரு யுத்தகளத்தில் நபிகளார் (ஸல்) அவர்கள் வரிசைகளை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்த போது தனது கையில் இருந்த ஈட்டியால் குத்தி ஸஹ்த் (றழி) அவர்களை நேர்ப்படுத்தினார்கள். அப்போது நாயகமே நீங்கள் குத்தியது எனக்கு வழிக்கிறது என்றார். உடனே நபிகளார் (ஸல்) அவர்கள் தனது ஆடையை விலக்கிக்காட்டி ஈட்டியால் குத்தும்படி கேற்க. உடனே அந்த ஸஹாபி அவர்கள். ஈட்டியை வீசிவிட்டு நபிகளாரி வைற்றில் முத்தமிட்டார்கள். ஏன் இவ்வாறு செய்தீர் என்று கேட்டபோது, நான் இந்த யுத்தத்தில் இருந்து திரும்பிவருவேனோ என்ற சந்தேகம் ஒருக்கிறது அதனால் தான் இவ்வாறு செய்தேன் என்றார். (இப்னு ஹிஸாம்)
கணவன் - மனைவி
ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது (தமது துணைவியரை) முத்தம் இடுவார்கள்! நோன்பு நோற்று இருக்கும் போது கட்டி அணைப்பார்கள். ஆனாலும் அவர்கள், உங்களை எல்லாம் விட தமது உணர்ச்சிகளை அதிகமாக கட்டுப்படுத் திக் கொள்ளக் கூடியவர்களாக இருந் தார்கள். ஆதாரம் புகாரி 1928, முஸ்லிம்: 2020
தாம்பத்ய உறவுக்காக மட்டும் இன்றி, சாதாரணமாகவும் மனைவியரை முத்தமிடுவது நபிகளாரின் நடைமுறை என்பதை இந்த ஹதீஸ் நமக்கு விளக்குகிறது.
ஜாபிர் (பின்) அப்துல்லாஹ் (ரலி) கூறினார்கள்:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஜாபிரே! திருமணம் முடித்துக் கொண்டாயா? என்று கேட்டார்கள். நன் ஆமாம் என்றேன். கன்னி கழிந்த (விதவைப்) பெண் ணையா? கன்னிப் பெண்ணையா? என்று கேட்டார்கள். (கன்னிப் பெண்ணை) அல்ல, கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மனம் முடித்துக் கொண்டேன்) என்று கூறினேன். கன்னிப் பெண்ணை மணம் முடித்து இருக்கலாமே, அவளும் நீயும் கொஞ்சிக் குலாவி இருக்கலாமே! என்று கூறினார்கள். உனக்கு என்ன நேர்ந்தது? கன்னிப் பெண்களும், அவர்களின் உமிழ் நீரும் உமக்கு வேண்டாமா? என்று கேட்டார்கள். புகாரி: 4052, 5080
அத்துடன் "நபி (ஸல்) அவர்களின் கைகளையும் கால்களையும் அப்துல் கைஸ் கூட்டத்தினர் முத்தமிட்டுள்ளனர். அதை நபிகளார் அங்கீகரித்துள்ளார்கள்" (அபூதாவூத்) இது தவிரவும் அபூதாவூத் (4548),ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளன.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என் நம்பிக்கையை அதிகமாக்கும் ஒரு விஷயத்தை எனக்குக் கற்றுக் கொடுங்கள் என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த மரத்தை அழை என்றார்கள். அவர் அழைத்தார். அந்த மரம் வந்து நபி (ஸல்) அவர்களிடம் ஸலாம் கூறியது. பின்னர், நீ சென்று திரும்பிச் செல் என்றார்கள். அது சென்று விட்டது. அப்போது அந்த மனிதர் தலையையும் காலையும் முத்தமிட அனுமதி கேட்டார். நபிகளார் அனுமதியளித்தார்கள். அவர் நபிகளாரின் தலையையும் காலையும் முத்தமிட்டார். புரைதா (ரலி), நூல்: ஹாகிம் (7326)
நாம் இந்த இறைத்தூதரிடம் சென்று (சில) கேள்விகளைக் கேட்டு வருவோம் என்று இரண்டு யூதர்களில் ஒருவர் மற்றொருவரிடம் கூறினார். அதற்கு அவர், நீ (அவரை) இறைத்தூதர் என்று கூறாதே! ஏனெனில் நீ இறைத்தூதர் என்று கூறியதை அவர் கேட்டுவிட்டால் அவருக்கு நான்கு கண்கள் வந்து விடும் (அதாவது அதிகம் பூரிப்படைந்து விடுவார்) என்று கூறி விட்டு நபிகளாரிடம் சென்றார்கள். நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது சான்றுகளை வழங்கினோம் (17:101) என்ற வசனத்தின் விளக்கத்தைப் பற்றிக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஒன்பது சான்றுகளையும்) விளக்கினார்கள்: 1. அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காதீர்கள்! 2. விபச்சாரம் செய்யாதீர்கள் 3. அல்லாஹ் தடை செய்த எந்த உயிரையும் நியாயம் இன்றி கொல்லாதீர்கள் 4. திருடாதீர்கள் 5. சூனியம் செய்யாதீர்கள்! 6. தவறிழைக்காதவனுக்கு எதிராக அவனைக் கொல்ல வேண்டும் என மன்னனிடம் முறையிடாதீர்கள்! 7. வட்டியை உண்ணாதீர்கள். 8. கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறாதீர்கள். 9. போர்க்களத்திலிருந்து புறமுதுகிட்டு ஓடாதீர்கள் என்று கூறிவிட்டு, சனிக்கிழமை வரம்பு மீறாதீர்கள் என்ற கட்டளை யூதக் கூட்டத்தினரே! இது உங்களுக்கு மட்டும் குறிப்பானதாகும் என்று விளக்கம் அளித்தார்கள். இதை கேட்டுக் கொண்டிருந்த இரண்டு நபர்களும் நபிகளாரின் கைகளையும் கால்களையும் முத்தமிட்டார்கள். மேலும் நீங்கள் இறைத்தூதர் தான் என்று நம்புகிறோம் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், நீங்கள் இருவரும் இஸ்லாத்தை ஏற்பதை தடுத்தது எது? என்று கேட்டார்கள். நபி தாவூத் (அலை) அவர்கள் தன்னுடைய சந்ததிகளில் நபி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தார்கள். மேலும் நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் எங்களை யூதர்கள் கொன்று விடுவார்கள் என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்று பதிலளித்தார்கள். ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி) ஆதாரம் திர்மிதி (2657, 3069), இப்னுமாஜா (3695)
இதுபோன்ற பல ஹதீஸ்கள் கைகளை முத்தமிடலாம் என்பதற்கு ஆதாரமாகக் காணப்படிகின்றன. அத்துடன் கைகளை முத்தமிடுவதை தடுக்கும் வகையில் எந்த அறிவிப்புக்களும் காணப்படவில்லை. எனவே தனது அன்புகுறியவர்களை அவர்களது கைகளை முத்தமிடுவது அன்பின் வெளிப்பாடாகுமே அன்றி அது இபாதத்தாக கருதாதவரை வழிகேடான அல்லது ஷிர்க்கான விடயமன்று. அல்லாஹ் எம் அனைவருக்கும் அனைவரையும் நேசிக்கும், அன்பு செலுத்தும் உள்ளத்தை தரட்டும். இதன் மூலம் இஸ்லாம் உலகின் அனைத்துத் திசைகளிலும் பரவட்டும். இது குறித்து போராசிரியர் ஷஹீத் செய்யித் குதுப் (றஹ்) அவர்களது வார்த்தையில் சொல்லவதானால்
"ஒருவர் குறித்த அன்பும் கனிவும் எமது உள்ளத்தில் முலைக்கும்போது சுமைகளும் கஷ்டங்களும் உள்ளத்தைவிட்டும் நீங்கிவிடுகின்றன, அப்போது அவனைப் புகழ்வதற்கு முகஸ்துதி தேவையில்லை" (அஃராஹுர் றூஹ்) என்று அன்பு என்ற சாதனம் கொண்டு தஃவா செய்வது குறித்த ஒரு அழகான கருத்தை குறிப்பிடுகின்றார்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.



