இஸ்லாமிய வழிகாட்டல் முற்றுமுழுதாக அல்லாஹ்விடன் நன்மையை எதிர்பார்த்து செயற்படுவதையே வழியுறுத்துகின்றது, அதனையே போதிக்கின்றது. இதற்கு அல்குர்ஆனிலும், அல்ஹதீஸிலும் பல சான்றூகளைக் காணமுடியுமாக உள்ளன. தொழுகையாளிகளைப் பற்றிக் கூறும் போது,
''தொழுகையாளிகளுக்கு கேடுதான், அவர்கள் மற்றவர்களுக்கு காண்பிப்பதற்காகவே தொழுகின்றனர்'' (அல்குர்ஆன் 107:5,6) என்று குறிப்பிடுகின்றது. எனவே தொழுகையாக இருந்தாலும் அதனை பிறருக்கு காண்பிக்கும் நோக்கில் செய்வது கூடாது என்பதைவிடவும், அது பாரியதொரு பாவமாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. அவர்களுக்கு கேடு உண்டாகட்டும் என்று கூறும் அளவுக்கு பாரதூரமானது.
இஸ்லாத்தில் இஃலாஸ் என்னும் உளத்தூய்மை மிக முக்கியமானது. அது இல்லாமல் போகின்ற போது அதற்கு அல்லாஹ்விடத்தில் எந்த பெறுமானமும் இல்லாது போகின்றது. அதுமட்டுமன்றி அந்த நபரோ குழுவோ தோழ்வியையே தழுவுவார்கள். இதனை அல்குர்ஆன் கூறும் போது,
'அதை தூய்மைப்படுத்துகிறவர் வெற்றிபெற்றார், அதனை களங்கப்படுத்தியவர் தோழ்வியடைந்தார்' (அல்குர்ஆன் 91:9,10) என்று உள்ளத்தைக் குறிப்பிடுகின்றது.
இது பற்றி ரஸூல் (ஸல்) அவர்கள் குறீப்பிடும் போது,
'நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய திருப்பொருத்தத்தை நாடி உளத்தூய்மையோடு செய்யப்படும் அமலைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்ளவதில்லை' (நூல்: நஸாயீ)
மற்றொரு இடத்தில்,
'ஒருவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி தர்மம் செய்தால் அவருக்காக அதனை அங்கீகரித்துக் கொண்டு அவரை சுவனத்தில் நுழைவிக்கின்றான்' (நூல்: அஹ்மத்)
எனவே ஒருவர் எவ்வளவுதான் பல நல்ல விடயங்களை செய்தாலும், எவ்வளவுதான் செலவிட்டாலும் உளத்தூய்மை என்ற அம்சம் இல்லாதுபோனால் அவை எத்தகைய பயனும் அற்றுப் போவதுடன், அல்லாஹ்விடத்தில் குற்றவாழியாகவும் மாறிவிடுகின்றான்.
இந்தப் பின்னனியி இருந்து இன்று தனி மனிதர்கள் அல்லது குழுக்கள் செய்யும் செயற்பாடுகள் பல தரப்பினராலும் விமர்சனத்திற்குள்ளாவது காணக்கூடியதாக உள்ளதுடன், இந்த விமர்சனம் ஒரு வகையில் நியாயமானதும் தான். இந்த கட்டுரை எழுதக் காரணமானது இதுபோன்ற சில விமர்சனங்களின் வெளிப்பாடேயாகும். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கையின் பல பாகங்களையும் மழை வெள்ளம், மண் சரிவு என்பன பாதித்தன. இச்சந்தர்ப்பத்தில் பல தனி நபர்கள், இயக்கங்கள் வழக்கம் போன்று தமது சமூக சேவைகளை உடனடியாக ஆரம்பித்தன.
இந்த சுய ஊக்கம் பாராட்டத்தக்கது, தேவையானதுமாகும், இவர்களால் பல ஆயிரம் போர் பயன்பெற்றமை மறுப்பதற்கில்லை. முன்வைக்கப்படும் விமர்சனம் என்ன வென்றால் இவ்வாறு செயற்பட்ட இயக்கங்கள் தமது பெயரை முன்னிருத்தி பதாகைகள் (Banners), தமது பெயர் பதித்த டீ சேர்ட்டுக்கள் (T-Shirts) போன்றனவற்றை காட்சிப்படுத்தி களத்தில் குதித்திருந்தனர். இது இஃலாசுக்கு முறனானது, இது அவர்களின் பெயரை பரப்பும் செயல்..... என்பதாகும்.
மேற்குறித்த அல்குர்ஆன், ஹதீஸ் வசனங்கள பார்க்கும் ஒருவர் இந்த சிந்தனையை நன்றாக புரிந்துகொள்வார், ஆனாலும் இதனை சற்று ஆலமக நோக்கவேண்டியுள்ளது, இதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. ஏனென்றால் அல்லாஹ் அல்குர்ஆனில் கூறும் போது,
'நீங்கள் செய்பவற்றை என் இறைவன் நன்கறிபவன்' (அல்குர்ஆன் 26:188) என்று ஒரு இடத்தில் கூறுகின்றான். இந்த வசனம் வெளிப்படையாகவே சொல்கின்றது, ஒருவர் செய்யக் கூடிய செயலை, அதன் உண்மைத் தனைமையை, அவரது நோக்கத்தை..... இதுபோன்ற இன்னோரன்ன விடயங்களை அல்லாஹ் அறிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவன். எனவே அவரவர் செயல் வெளிப்படையாகவே மறைமுகமாகவோ எப்படி இருந்தாலும் அது அல்லாஹ்வுக்கு பிரச்சினைக் குறியதல்ல என்பது.
அதேபோன்று பிரபலமான ஹதீஸ் ஒன்றில்
'எண்ணத்தை பொருத்தே செயல்கள் அமைகின்றன' (நூல்: முஸ்லிம்) என்று குறிப்பிடுகின்றார்கள்.
இந்த ஹதீஸை இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அரசியல் அதிகாரம் என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார்கள். ஏன் இமாம் அவர்கள் இதனை இந்தத் தலைப்பில் பதிந்தார்கள் என்பது எமக்குத் தெரியாத போதும், அரசியல் என்பதில் விளம்பரம் அல்லது பிரச்சாரம் என்ற அம்சம் காணப்படும். அதே நேரம் அரசர்கள், அரசியல் வாதிகள் இயல்பாகவோ அல்லது இன்னொருவராலோ விளம்பரப்படுத்தப்படுவார்கள். அல்லது அவர்கள் செய்கின்ற நல்ல அல்லது மோசமான செயல்களால் அவர்கள் விளம்பரப்படுத்தப்படுவார்கள். விளம்பரப்படுத்துவது அவசியமானதாகவும் காணப்படுகின்றது, இல்லாதபோது மக்களிடத்தில் இருந்து மறைந்து மறந்து போய்விடும் அபாயம் காணப்படுகின்றது. இவ்வாறு எந்த வகையிலோ அவர்கள் விளப்பரப்படுத்தப்படுவார்கள் அந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கான கூலி மறுமையிலும் கிடைக்க வேண்டுமாக இருந்தால் அவர்களின் நீய்யத் எனப்படும் எண்ணம் நல்லதாக இருக்கவேண்டியது கட்டாயமாகும். அங்கு முகஸ்துதி அறவே கூடாது, என்பதை இந்த இடத்தில் பதிவதன் நோக்கத்தை நாம் அணுமானிக்க முடியுமாக உள்ளது.
மற்றொரு ஹதீஸில்,
'அல்லாஹ்வின் பாதையில் போராடுபவரின் நிலையானது, - உண்மையாகப் போராடுபவர் யார் என்பது அல்லாஹ்வுக்கே தெரியும்' (நூல்: புஹாரி) என்று குறிப்பிடுகின்றார்கள். பொராட்டத்தை மறை முகமாக் செய்ய முடியாது. அதற்காக போர்க்களம் சென்றாக வேண்டும். இந்த விடயத்திலும் அவர் சிறந்த முறையில் போரிட்டால் அவர் அடையாளப்படுத்தப்படுவார். அதேனோரம் போர்க்களத்தில் குறிப்பிட்ட படை வீரர் எந்த அணிக்குறியது? எதிரியா? எமது வீரரா? என்பவற்றை அறியவும் அவர் அடையாலப்படுத்தப்படுவது கட்டாயமாகின்றது. எனவே அந்த நபரின் செயலை இஃலாசுக்கு முறனானது என்று இதுவரை யாரும் சொன்னதில்லை.
அதேபோன்று, 'நிச்சயமாக அல்லாஹ் உங்களின் (புறத்) தோற்றங்களையோ உங்களின் பொருளாதாரத்தையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான்' (நூல்: முஸ்லிம்) என்ற ஹதீஸ் மற்றுமொரு விடயத்தையும் சொல்கின்றது, இப்படி எமது பாசையில் சொல்வோமாயின் அதாவது ஒரு செயலை செய்யக்கூடியவரது வெளித்தோற்றத்தை; அவர் இயக்கக் கொடியுடனா, இயக்க பெயர் பதித்த டீ ஷேர்ட், தொப்பியடனா, பெனர்களுடனா வேலை செய்கிறார் என்று பார்ப்பதில்லை. குறிப்பிட்ட ஒரு செயலை ஒருவர் செய்கிறார் எனில், அந்த செயல் நல்லதா? தீயதா? அவனது உள்ளம் இந்த விடயத்தில் எப்படி உள்ளது என்றே பார்க்கிறான். எனவே இந்த ஹதீஸ் தெளிவானது புறத்தோற்றம் எந்த வகையிலும் முக்கியமில்லை என்பதற்கு.
இது இப்படி இருக்கும் நிலையில் சிலர், சிலர் மீது, சில ஜாமாஆத்கள் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு காரணமாக இல்லாத பொல்லாத விடயங்களை எல்லாம் பரப்பிவிடுகின்றனர். அவை அதிகாமானவை வதந்திகளாகவும், இன்னும் ஒரு பகுதி அவதூராகவுமே இருக்கின்றது. இந்த நிலை மிகப் பாரதூரமானதாகும் என்பதை ஒரு கனம் அத்தகையவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். இல்லாத போது அது அவர்களை நன்மைகளை அழித்துவிடும், அவர்களது மறுமை வாழ்க்கையையும் பாதித்துவிடும்.
இது பற்றி அல்லாஹ் அல்குர் ஆனில் கூறும் போது, 'குறை சொல்லி புறம் பேசித்திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்' (அல்குர்ஆன் 104:1) என்று தெளிவானதொரு எச்சரிக்கையை விடுக்கின்றான்.
அத்துடன், ‘மேலும் உங்களில் சிலர் சிலரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது இறந்த தம்முடைய சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள்’. (அல்குர்ஆன் 49:12) புறம் பேச வேண்டாம். அது நஜீஸானது எனவும் குறிப்பிடுகின்றான்.
மற்ற அம்சம் இந்த வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து நிவாரன செயற்பாடுகள் என்பது ஒரு முக்கியமான, அத்தியவசியாமான தேவை அதன் அவசியம் பாதிக்கப்பட்டவர்களை தவிர ஏனையோயால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாத உணர்வு. இந்த சந்தர்ப்பத்தில் யாரு யாரும் உதவி செய்யமாட்டார்களா என்று மக்கள் ஏங்கும் நேரம், எனவே அந்தகைய அவர்களுக்கு எத்தகையவராயினும் உதவிசெய்வதுதான் அவர்களது தேவையே தவிர எமது விமர்சனங்கள் அல்ல, விமர்சனங்கள் அந்த உதவிகளை வீணடிக்குமே அன்றி இல்லை.
அத்துடன் இத்தகைய சந்தர்ப்பத்தில் களத்தில் செயற்படுபவர்கள் யார் என்பது அறியப்படுத்தப்படுவதும், விளம்பரம் செய்யப்படுவதும் மிக அவசியாமானதாகவும் காணப்படுகின்றது. காரணம் என்னவென்றால்,
பாதுகாப்பு: யாரோ வந்து ஏதோ கொடுத்துவிட்டுப் போகிறார்கள், அதனை உற்கொண்டவர்களுக்கு சுகயீனம் ஏற்படுகின்றது என்றால், தமது பொருற்களை சூரையாடுகிறார்கள் என்றால் அந்த பொருளை யார் கொடுத்தது? யார் வந்து போனார்கள்? என்பது தொரிந்தால் தான் விசாரிக்க முடியும், ஏனையவர்களை அறிவுறுத்த முடியும். இது ஒரு உதாரணம் மட்டுமே
சரியான முறையாக்கத்திற்கு: ஒரு குழு இயங்கி இந்த சூழ்நிலையை கட்டுப்படுத்த வேண்டும். மக்களுக்கு தமது பிரச்சினைகளை சொல்வதற்கு உத்தியோக பூர்வமான ஒரு செயற்பாடு இருக்கவேண்டும். இல்லாத போது அனைவரும் அதில் தலையை நுழைப்பதன் மூலம் அந்த விடயம் சிக்கலாகி, பாரதூரமானதாகிவிடும்.
சுட்டிக் காட்டுவதற்கு: ஒரு குழு எல்லை மீறி செயற்படிகின்றது, ஒரு தலைப்பற்சமாக மக்களை வழிந்டாத்த முறபடுகின்றது என்றால் மக்கள் அவதிப்பட் நேரிடுகின்றது. இந்தகைய சந்தர்ப்பங்கள் நிகழ்ந்தால் இந்தகையவர்கள் தான் என்று செல்லமுடியுமாக இருக்கவேண்டும்.
இப்படி விளம்பரத்தின் அவசியத்தை உணர்த்தலாம். விளம்பரம் இல்லாமல் செயற்படுபவர்கள் அதிகமான சந்தர்ப்பங்களில் திருடர்களாகத்தான் இருக்க வேண்டும்.
விளம்பரம் அடுத்தவர்களையும் நன்மையின் பால் தூண்ட செய்கின்றது. அதானால் நபிகளார் ஸல் அவர்களை சஹாபாக்களை பலர் முன்னிலையிலே பாராட்டியுள்ளார்கள், அவர்களது செயலை சொல்லிக் காட்டியுள்ளார்கள். இது கூடாது என்றிறுந்தால் நபிகளார் ஸல் அவர்கள் இவ்வாறூ பகிரங்கமாக பாரட்டியிருக்க மாட்டார்கள். இதற்கு பல நூறு உதாரணங்களை பார்க்கலாம்,
ஒரு முறை கைஸ் கூட்டத்தார் நபி (ஸல்) அவர்களைப் பார்க்க வந்தார்கள். அவர்களிடம் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேசிவிட்டு இறுதியாக அவர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களிடம் இரண்டு குணங்கள் இருக்கின்றன. அவ்விரண்டு குணங்களை அல்லாஹ் நேசிக்கின்றான். 1. அறிவாற்றல் 2. நிதானம் (நூல்:முஸ்லிம்)
''ஹஸனும் ஹுஸைனும் சுவர்க்க வாசிகளின் இளைஞ்சரணித் தலைவர்கள்'' (நூல்: அபூதாவூத்)
''(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோரும் உஹுது மலை மீது ஏறினார்கள். அது நடுங்கியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும், ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்' என்று கூறினார்கள்''. நூல்: புஹாரி)
''உமர் (ரலி) இஸ்லாத்தை ஏற்ற நேரத்திலிருந்து நாங்கள் வலிமையும் கண்ணியமும் உடையவர்களாகத் திகழலானோம்'' (நூல்: புஹாரி)
''நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்குச் சமமாக எவரையும் கருதுவதில்லை...." (நூல்: புஹாரி)
''ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே! நம்முடைய நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் அவர்கள் தாம்'' (நூல்: புஹாரி)
இவ்வாறு ஸஹாபாக்களின் சிறப்புக்கள் ஏராலம் ஏராலம். அவை பகிரங்கப்படுத்தப்பட்டதால் தான் இவற்றை நாம் அறிகின்றோம். இந்த விளம்பரங்களை யாரும் முஹஸ்துதி என்று கூறுவதில்லை.
எனவே இஸ்லாமிய சகோதரர்களே! நாம் முஸ்லிம்கள் இலங்கையில் சிறு பன்மையினர் என்ற வகையிலும் இன்னும் அதிகம் சிந்தித்தே செயற்படவேண்டும். அத்துடன் எமக்கு சரியாக தெறியாத விடயங்களிளே நாம் அதிகம் கருத்துப் பரிமாறுகின்றோம். இதுவும் அபத்தானது இது பற்றி அல்குர்ஆனில் கூறும் போது,
‘எதைப் பற்றி உமக்கு ஞானமில்லையோ அதைப் பின்பற்ற வேண்டாம்! நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலன், பார்வை இதயம் இவை ஒவ்வொன்றுமே கேள்வி கேட்கப்படும்’. (அல்குர்ஆன் 17:36) என்று கூறுகின்றான். இது மறுமையில் எமது ஹிஷாபை இன்னும் கடுமையாக்கக் கூடியதாகும்.
நிச்சயமாக அடியான் சில நேரங்களில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்கு உரிய விஷயங்களை அதன் முக்கியத்துவத்தை உணராமலேயே கூறுகிறான். (எனினும்) அல்லாஹ், அதற்காக அவன் அந்தஸ்துகளை உயர்த்துகிறான். நிச்சயமாக அடியான் சிலவேளைகளில் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய விஷயங்களை அதன் தீங்குகளை உணராமலேயே பேசிவிடுகிறான். அதன் காரணமாக அவன் நரகில் வீழ்கிறான் (நூல்: புஹாரி) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘(நாளை மறுமையில்) மனிதர்களை முகம் குப்புற நரகத்தில் வீழ்த்துவது அவர்களின் நாவு செய்த தவறே தவிர வேறெதுவும் இல்லை' (நூல்: திர்மிதி) என ஒரு நீண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'
‘(முஃமின்கள்) வீணானதை செவியுற்றால் அதைப் புறக்கணித்து, எங்களுக்கு எங்கள் அமல்கள், உங்களுக்கு உங்கள் அமல்கள்! உங்களுக்கு சாந்தி உண்டாகுக! அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை என்று கூறுவார்கள்’. (அல்குர்ஆன் 25:55)
ஒருவர் இன்னொருவரை ‘பாவி’ என்றோ ‘காஃபிர்’ என்றோ கடுஞ்சொல் கூற வேண்டாம். (ஏனெனில்) குற்றம் சுமத்தப்பட்டவர் அப்படி இல்லையெனில் அது அவர் (சொன்னவர்) பக்கமே திரும்பி விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி)
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் புறம் பேசுவது என்றால் என்ன? என தோழர்களிடம் வினவினார்கள். அதற்கு தோழர்கள் அல்லாஹ்வும் அவனது திருத்தூதருமே இதனை நன்கறிந்தவர்கள் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (புறம் பேசுவது என்பது) நீர் உம் சகோதரரைப் பற்றி அவர் வெறுப்பதைக் கூறுவதாகும் என பகர்ந்தார்கள். நான் கூறும் விஷயம் என் சகோதரரிடம் இருந்தால்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் நீர் கூறும் விஷயம் அவரிடம் இருந்தால் நீர் அவரைப் பற்றி புறம் பேசிவிட்டீர். நீர் கூறும் விஷயம் அவரிடம் இல்லையென்றால் நிச்சயமாக நீர் அவரைப்பற்றி அவதூறு கூறிவிட்டீர் (நூல்: முஸ்லிம்) எனப் பகர்ந்தார்கள்.
எனவே விளம்பரம் என்பது இஸ்லாத்தின் பார்வையில் அடிப்படையிலே ஹராமான ஒன்றல்ல, அது அவரவர் எண்ணத்தைப் பொருத்ததாகும். எனவே இதனை கருத்திற்கொண்டு செயற்படுவோம் என்று கேட்டு விடைபெறுகிறேன்.
நயிம் சுக்ரி
றம்புக்கனை.


