நடைமுறையில் ஒரு செயலை செய்வதற்கும் அது குறித்த கோட்பாட்டை பேசுவதற்கும் இடையிலான வேறுபாடு மிகவும் பாரியது. ஜிஹாதை பற்றி ஆயிரம் குத்பாக்கள் செய்வதைவிட ஒருகணம் போராடுவது கடினம். இதுதான் யதார்த்தம்.
இன்று இக்வான்கள் வசம் எகிப்தின் ஆட்சி கிட்டியுள்ள நிலையில் பலரும் இஸ்லாமிய ஆட்சி குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். ஆனால் கடந்த எட்டு தசாப்தங்களாக இஸ்லாமிய தனித்துவத்தை பாதுகாக்க இக்வான்கள் குதித்த ஜீவமரணப் போராட்டதை எகிப்து மக்களே நன்கறிவர்.
ஆனால் இஸ்லாமிய ஆட்சியை உடனே கொண்டு வரவேண்டும் எனகுரல் கொடுப்போர் கொடுங்கோல் ஆட்சி தலை விரித்தாடிய போது மௌனித்து வாய்மூடி வெறும் பிக்ஹு சட்டங்களுக்குள்ளால் மட்டும் தமது “தாவா” “பணியை சுருக்கி இருந்தமை மிக அண்மித்த வரலாறாகும். 2011 ஆம் ஆண்டு வரை தேர்தலும்,ஆர்ப்பாட்டமும் ஹராமென கூறி இபாதத் பகுதியில் மட்டும் தங்கள் பிரசாரத்தை முன்னெடுத்த இஸ்லாமிய அமைப்புகளின் வரலாறு மறக்கவோ மறைக்கவோ முடியாத மிக அண்மித்த வரலாறாகும் .ஐந்து நேரம் பள்ளியில் தொழுவது குற்றமாக பார்க்கப்பட்ட சர்வாதிகார யுகத்தில் ஆட்சியாலனை எதிர்த்து பேசுதல் என்பது கனவில் கூட பெரும்பாலனவர்கள் நினைக்காத ஒருவிடயம். இங்குதான் இறைத்தூதர் ஸல் அவர்களின்
“அநியாயக்கார ஆட்சியாலனுக்குமுன்னால் சத்தியத்தை உறைப்பது மிகச்சிறந்த ஜிஹாத்” (முஸ்னத் அஹ்மத்:3/19) என்ற பொன்மொழியின் சரியான அர்த்தத்தை புரியமுடிந்தது.
எனவே குலைநடுங்கும் சித்திரவதைகளுக்கு முகம் கொடுத்து பெரும் இஸ்லாமிய சாத்வீக போராட்டமொன்றை நடாத்திய இக்வன்களின் சிந்தனையில் இஸ்லாமிய ஆட்சி குறித்த தெளிவான பார்வையும் அதனை வழிநடாத்த தகுதியான நூற்றுக்கணக்கான அறிஞர்களும் இருப்பதை சிலர் அறியாமல் இருக்கலாம். எனவே மேலோட்டமாக இணையத்தலங்களில் அல்லது பொதுஊடகங்களில் ஒருசில செய்திகளை கேட்டுவிட்டு இஸ்லாமிய ஆட்சி தொடர்பில் இக்வான்களை விமர்சிப்பது சிறுபிள்ளைத்தனமான செயற்பாடாகும். இக்வவான்க்ளும் மனிதர்கள் என்றவகையில் அவர்களும் தவறுவிடக்கூடியவர்கள். அந்த தவறுகளை அறிவுபூர்வமாக ஆதரபூர்வமாக சுட்டிக் கட்டுவதே ஏற்புடையது.
இஸ்லாமிய ஆட்சி குறித்து பேசுவோர் பெரும்பாலும் மறந்துவிடும் முக்கிய அடிப்படை “ இஸ்லாத்தை உளப்பூர்வமாக ஏற்று நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு மனித குழுமம்” என்பதாகும். இக்வான்களின் தாவா சிந்தனையில் “ இஸ்லாத்தை உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்லும் பரம்பரையை உருவாக்கல் “என்பது முக்கிய அம்சமாகும். சட்டங்களின் அடியாக மட்டும் இஸ்லாத்தை நடைமுறைப்படுதமுடியும் என நினைப்பது இஸ்லாமிய ஆட்சி குறித்த தெளிவின்மையின் தவறாகும். மனிதனை மாற்றுவது சாதாரண விடயமல்ல. எனவே மனித உள்ளங்களின் மாற்றமே இஸ்லாம் எதிர்பார்க்கும் மாற்றமாகும். இது அல்குர்ஆனின் அடிப்படை கருத்தாகும். ( எந்த ஒரு சமூகமும் அவர்களது உள்ளங்களில் இருப்பவற்றை மாற்றி கொள்ளாத வரை நிச்சியமாக அல்லாஹ் அந்த சமுகத்தை மாற்றமாட்டான் ) ( சூரா அர்ராத்:11) எனவே இதுதான் சமுக மாற்றதின் அடிப்படையாகும்.
இந்த மாற்றம் படிப்படியாக இடம்பெறக்கூடியது என்பது அல்லாஹ்வின் நியதியாகும். இறைத்தூதர் ஸல் அவர்களின் சீராவில் இருந்து நாம் படிக்கும் முக்கியபாடமும் இதுவாகும். 23 வருடங்களாக அல்குர்ஆன் படிப்படியாக இறக்கப்பட்டமை இதனை தெளிவாக சுட்டி நிற்கிறது.
இந்தப்பின்னணியில் இஸ்லாமிய ஆட்சியை நடைமுறைப்படுத்துவதில் இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட மனித குழுமமும் , படிப்படியான நடைமுறையும் முக்கிய அடிப்படைகளாகும். இன்று இக்வான்கள் ஆட்சியை அடைத்திருக்கிறார்கள் என்றால் அது சுமார் 85 வருட கட்டம் கட்டமான, நீண்ட பயணத்தின் விளைவாகும். இதுதான் யதார்த்தம். அந்த நீண்ட பயணத்துக்குப்பின்னால் ஓர் ஈமானிய பரம்பரையை உருவாக்குவதில் இக்வான்கள் வெற்றிகண்டனர். அதுவே அவர்களின் வெற்றியின் இரகசியமாகும்.
இக்வான்களின் இவ்வெற்றி மற்றும் பல இஸ்லாமிய இயக்கங்களை பின்தள்ளிவிட்டது எனக்கூறுவது பொருத்தமல்ல. எனினும் இவ்வெற்றி மற்றும் பல இஸ்லாமிய இயக்கங்கள் அவற்றின் தாவா வழிமுறைகளை மீள்பரிசீலனை செய்யத்தூண்டியுள்ளது. இந்த வகையில் எகிப்தின் சலபிக்கள் தேர்தலில் போட்டியிட முன்வந்தமையை குறிப்பிடலாம். இது அவர்களின் அடிப்படை சிந்தனையில் ஏற்பட்ட மாற்றமா ? அல்லது யதார்த்த கள நிலவரம் திணித்த மாற்றமா ?என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
அடுத்ததாக இக்வான்களின் இந்த வெற்றி நிச்சயம் ஹிஸ்புத்தஹ்ரீர் அமைப்பையும் அவர்களின் தாவா வழிமுறை குறித்து மீள்பர்சீலனை செய்ய தூண்டியிருக்கும். இஸ்லாமிய ஆட்சிதான் தமது இலட்சியம் என்றால் ,அதனை எங்கு? எப்படி ?யார்மீது ?நடைமுறைப்படுத்துவது என்பதற்கு ஹிஸ்புத்தஹ்ரீர் என்ன பதில் சொல்கிறது.? நவீன ஜாஹிலிய்யத் தலைவிரித்தாடும் மேற்கு நாடுகளில் ( தாருள் குப்ர் )இஸ்லாமிய இயக்கங்களின் முதன்மை பணி என்ன? நான்கு சுவர்களுக்குள்ளால் இஸ்லாமிய ஆட்சி குறித்து பேசுவதா ? அல்லது அன்றாட வாழ்வில் தமது “ ஈமானை “ பாதுகாத்துக்கொள்ள ஜீவமரணப்போராட்டத்தில் குதித்துள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களின் ஈமானை பாதுகாக்க உழைப்பதா ?. எனவே இவ்விடயம் தொடர்பில் தெளிவான நிதானமான ஒரு முடிவுக்கு வருவதே முஸ்லிம் சமூகதுக்ககு மிகவும் பயனளிக்கும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.
இறுதியாக , உலகை வழிநடாத்த தகுதியான பரம்பரையை உருவாக்கும் சமூகத்துக்கே அல்லாஹ் ஆட்சியையும் அதிகாரத்தையும் கொடுக்கிறான். என்பதுவே இஸ்லாமிய ஆட்சியின் பின்னணியில் உள்ள யதார்த்தமாகும்.
( BY:MOHAMED NISHAD – NALEEMI)

No comments:
Post a Comment